தமிழகம்

சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்.8-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது மக்கள் விரோத போக்காகும். இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்த தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 8-ம் தேதி காலை 11 மணி அளவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, துணை தலைவர் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அதேபோன்று செங்கல்பட்டு கரு.நாகராஜன், கோவை சி.பி.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் நாராயணன் திருப்பதி, திருப்பூர் வினோஜ் பி.செல்வம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT