சென்னை: கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் மத்திய பாஜக அரசு ஏழை, எளிய,நடுத்தர மக்களை வஞ்சம் தீர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும்
கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தலைமையில் சென்னை பாரிமுனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.26 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு வசூலித்துஉள்ளது. நாட்டில் 26 லட்சம் கோடிகுடும்பங்கள் உள்ளன. ஒவ்வொருகுடு்ம்பத்தில் இருந்தும் ஒரு லட்சத்தை மத்திய அரசு வரியாக வசூலித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டது போல இந்தியாவிலும் நெருக்கடிஏற்படலாம். இலங்கை அரசுகார்ப்பரேட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால் நெருக்கடியை சந்தித்துள்ளது. அதுபோன்ற அபாயம் இந்தியாவுக்கும் உள்ளது.
கார்ப்பரேட்டுகளை வாழவைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை வஞ்சம் தீர்த்து வருகிறது மத்திய பாஜக அரசு. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் பெரும் போராட்டத்துக்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு பேசினார்.