சிவகங்கை: மானாமதுரை அருகே கீழப்பசலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந் துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழப்பசலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 54 பேருக்கு ரூ.35.46 லட்சம் நகைக்கடன் தள்ளு படி செய்யப்பட்டு பட்டியல் ஒட்டப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, கிராம மக்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து 2-வது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்தோரின் பட்டியல் ஒட்டப்பட்டது. அதில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் ஊழியரின் பெயரில் 5 முறை வைக்கப்பட்டுள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கும், வெளிநாட்டில் உள்ளவரின் பெயரிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூட்டுறவு சங்கத்தில் முறையிட்டும் பதில் இல்லை. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு கூறு கையில், பட்டியல் ஒட்டிய பிறகும் தவறு இருந்தால் நகைக்கடன் தள்ளுபடியை நிறுத்துகிறோம். கீழப்பசலையில் 5 பேரின் நகைக்கடன் தள்ளுபடியை நிறுத் தியுள்ளோம் என்றனர்.