நாகர்கோவில்: ஆபத்தான நிலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்என, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாழக்குடி அருகே உள்ள கனகமூலம் குடியிருப்பு பகுதி மக்கள் கவுன்சிலர் சுயம்புகேசவன் தலைமையில் ஆட்சியர் அரவிந்திடம் அளித்த மனுவில்,
“புலியூர்குறிச்சி குளக்கரையில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 55 குடும்பங்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பட்டா தருவதாக அதிகாரிகள் கூறியிரு ந்தனர். ஆனால் தற்போது, பட்டா இல்லாதவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. அரசின் அடுக்குமாடி வீடு கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கூலித் தொழிலாளர்களான எங்களுக்கு தனிவீடு அமைத்து தரவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி கிழக்குமாவட்டச் செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் அளித்த மனுவில், “ஆரல்வாய்மொழி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கரோனா காலத்துக்கு முன் 4 ரயில்கள் நின்று சென்றன. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லை. பயணிகள் நலன் கருதி ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் மீண்டும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய ரயில்வே நிர்வாகம் நவடிக்கை மேற்கொள்ள உரிய பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் மேசியா தலைமையில் அளித்த மனுவில், “பத்மநாபபுரம் அரண்மனை மேற்கு தெருவில் பழமையான ஓட்டு கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பத்மநாபபுரம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சைத் தமிழகம் கட்சியின் விவசாய அணி தென்மண்டல தலைவர் சங்கரபாண்டியன் தலைமை யில் அளிக்கப்பட்ட மனுவில், “ஆரல்வாய்மொழி-பொய்கை அணை அடிவாரத்தில் தட்டான்விளை கலுங்குஓடை அருகே உள்ள நிலத்தில் பனை மரத்தை சமூக விரோதிகள் முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர். தமிழக அரசு பனை மரத்தை வெட்ட தடைவிதித்துள்ள நிலையில், இவ்வாறு செயல்பட்டுள்ளனர். பனை மரத்தை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் பேறுகால நிதியுதவி பலருக்கும் வழங்கப்படாமல் உள்ளது. விரைவில் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.