ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த குவைத் நாட்டில் இறந்த மீனவர் கண்ணுச்சாமியின் மனைவி மற்றும் குழந்தைகள்.  
தமிழகம்

குவைத்தில் இறந்த மீனவரின் உடலைக் கொண்டுவரக் கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனைவி, குழந்தைகள் மனு

கி.தனபாலன்

ராமநாதபுரம்: குவைத் நாட்டில் இறந்து போன ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் உடலை தாய்நாடு கொண்டுவர உதவ வேண்டும் என்று மீனவரின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே பாசிபட்டினத்தைச் சேர்ந்த வனிதா, வெளிநாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இறந்து போன தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர அரசு உதவ வேண்டும் என தனது 3 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் இன்று திங்கள்கிழமை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வனிதா கூறியது: "மீனவரான எனது கணவர் கண்ணுச்சாமி கடந்த 2019-ம் ஆண்டு குவைத் நாட்டிற்கு மீன்பிடி கூலித் தொழிலாளியாக சென்றார். அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக, அவருடன் வேலைபார்க்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த கண்ணன் மூலம் அறிந்தோம். அன்று முதல் நானும், எனது குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளோம். எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யவும், எனது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வெளிநாட்டில் இறந்த மீனவருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மகன், 6-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT