ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியை அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் தேர்தல் ஆணையம் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பதற்காக 8 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும்; ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று உறுதியேற்கும்படி கட்சிகளையும், வேட்பாளர்களையும் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் தேர்தல் என்பது புதிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்கள் திருவிழவாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் இழிவான கலாச்சாரம் தலையெடுத்த பிறகு, தேர்தல் என்பது வாக்குகளை விற்பனை செய்யும் வணிகமாக மாறி விட்டது.
தில்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் நிலவும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள ஏழைகளில் 78 விழுக்காட்டினரின் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது.இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் தான் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் இழிசெயலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும் தேர்தல் ஆணையம் நம்பிக்கையளிக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனினும், தலைமைத் தேர்தல் ஆணையர் இப்போது தெரிவித்துள்ள திட்டங்கள் சிறந்தத் தொடக்கத்திற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.
இவை அனைத்தும் அறிவிப்புகளாக மட்டுமின்றி, செயல்பாடுகளாகவும் மாறும் போது தான் அதன் முழுப்பயனும் ஜனநாயகத்துக்குக் கிடைக்கும். ஓட்டுக்கு பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கூறியுள்ள யோசனைகள் அனைத்தும் பாமக தொடர்ந்து முன்வைத்து வரும் யோசனைகள் தான்.
ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என உறுதிமொழி வழங்கும்படி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நான் பல முறை அறிவுரை வழங்கியுள்ளேன்; சில முறை சவால்கள் விடுத்துள்ளேன். ஆனால், அத்தகைய வாக்குறுதியை அளிக்க இக்கட்சிகள் முன்வரவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இரு கட்சிகளிடமிருந்து இப்படி ஓர் உறுதிமொழியை வாங்கும் என்று நம்புகிறேன்.
அண்மையில் தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் தரும் கட்சிகளில் திமுக 51% வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக 49% வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இத்தகைய சூழலில் இந்த கட்சிகள் இப்படி ஓர் உறுதிமொழியை வழங்கினால் தான், தமிழ்நாட்டில் இம்முறை ஓட்டுக்கு பணம் தரப்படாமல் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் உள்ள வாக்காளர்களிடம் ஏற்படும்.
வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை பாமக பலமுறை தானாக முன்வந்து வழங்கியிருக்கிறது. இதற்கான உறுதிமொழியை ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் எழுத்து வடிவிலும் வழங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளிடமும் இத்தகைய உறுதிமொழி வாங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் இப்போது கூறியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் பாமக வழங்கும்.
இதேபோல் , மற்ற கட்சிகளிடமிருந்தும் இத்தகைய உறுதிமொழியை ஆணையம் பெற்று, அவற்றை சுவரொட்டிகளாக மாற்றி மக்கள் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி வளாகத்திலும் அதிக எண்ணிக்கையில் ஒட்ட வேண்டும். அப்போது தான் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணமும் வாக்காளர்களிடம் ஏற்படும்.
எனவே, பண பலத்தைக் தடுப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஜைதி அறிவித்த 8 அம்ச திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதுடன், ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியையும் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பெறவேண்டும். இத்தனைக்கு பிறகும் ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்த தொகுதியில் தேர்தலை ஒத்திவைப்பது, அக்கட்சியின் வெற்றி செல்லாது என அறிவிப்பது, கட்சின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தயங்கக்கூடாது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.