தாம்பரம்: கடந்த காலங்களில் மக்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருந்து பெற்று வந்த நிலையில், தற்போது விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்து, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகம் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையே காண முடிகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புதிய அட்டை கோரி விண்ணப்பித்தோருக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய அட்டை கேட்டு மனு கொடுத்தவர்களின் விவரங்களைப் பதிவேடுகளில் ஏற்றி மனு என்ன நிலையில் உள்ளது என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிவாக அறிவித்தால், மக்களின் சிரமம் குறையும். ஆனால், சென்னையில் உள்ள உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் சுமார் 10 ஆயிரம் புதிய அட்டைகள் அச்சிட்டு வழங்க வேண்டி உள்ளது. மக்களின் சிரமத்தைக் குறைக்க உடனடியாக புதிய ரேஷன் அட்டைகளை அச்சிட்டு உரியவர்களுக்குக் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தவுடன் உரிய ஆவணங்கள் இருந்தால் ஒரு வாரத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு அவர்களுக்கு புதிய அட்டை வழங்க அனுமதிக்கப்படுகிறது.
தற்போது புதிய அட்டை அச்சிட்டு வருவதற்குத் தாமதம் ஏற்படுவதால் குறித்த காலத்துக்குள் ரேஷன் அட்டை வழங்க இயலவில்லை. இதனால், மக்களுக்கும் எங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது. புதிய அட்டை அச்சிட்டு வருவதற்கு ஏற்படும் காலதாமதத்தைத் தடுக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.