தமிழகம்

கரூர் - சேலம் விரைவு ரயிலை சேலம் டவுன் வரை இயக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரூரில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை இயக்கப்படும் ரயிலை சேலம் டவுன் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 8.50 மணிக்குப் புறப்படும் முன்பதிவற்ற விரைவு ரயில் மோகனூர், நாமக்கல், களங்காணி, ராசிபுரம், மல்லூர் வழியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்படும் ரயில் கரூருக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சேலம் ஜங்ஷன் வரை இயக்கப்படும் ரயிலை, சேலம் டவுன் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹரிஹரன் பாபு கூறியதாவது:

சேலத்தின் வர்த்தக முக்கியத் துவம் வாய்ந்த பகுதியாக செவ்வாய்பேட்டை உள்ளது. இங்கு சேலம் மாவட்டம் மற்றும்அண்டை மாவட்டங்களில் இருந்து, ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு அதிக பயணிகள் வந்து செல்கின்றனர்.

எனவே, இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் கரூர்- சேலம் ரயிலை, சேலம் டவுன் ரயில் நிலையம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை நிறுத்த இடம் போதவில்லை என்றால், ஏற்கெனவே செயல்பட்டு வந்த சேலம் கிழக்கு ரயில் நிலையத்தை ஹால்டிங் ஸ்டேஷனாக புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT