சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர், காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி டி-6 காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். மேலும், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் வரும் 25 காவல் நிலையங்களிலும் இந்த வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சி அளிக்கப்பட்ட காவலர், பணியில் ஈடுபடுவார். அத்துடன், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பிரிவின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், காவல் நிலையத்தில் கூட்டம் சேர்வது தடுக்கப்படும்.
இதேபோல், ஆயுதப் படை காவலர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிப்பதற்கான செயலியையும் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், ஆயுதப்படை காவலர்கள்விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலனை செய்ய முடியும் என ஆவடி காவல்ஆணையரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.