டெல்லியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து மனு அளித்தனர். 
தமிழகம்

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் புதுச்சேரி மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் புதுவை திமுகவினர் மனு

செய்திப்பிரிவு

புதுச்சேரி மக்களுக்காக நாடாளு மன்றத்தில் தமிழக திமுக எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் மு.க.ஸ்டாலினிடம் புதுச்சேரி திமுகவினர் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், திமுக அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப் பதாவது:

நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரி நீடிக்கிறது. மாநில அந்தஸ்து இல்லாததால் மத்திய அரசின் நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படாமல் உள்ளது. சட்டப்பேரவை இருப்பதால் யூனியன் பிரதேசங்களைப் போல வரிச்சலுகையும் தருவதில்லை.

மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்யாமலேயே தனிக்கணக்கு தொடங்கியதால் புதுச்சேரியின் கடன் ரூ.10 ஆயிரம் கோடியாக உள்ளது. மாநிலத்தில் தேர்வாணையம் இல்லாததால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். மாநில அந்தஸ்து மட்டுமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு ஒரே தீர்வாக இருப்பதால் அதற்கு திமுக குரல் கொடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள வாரியங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் ஊதியமின்றி உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதனை சீர்தூக்கி பார்த்து, பொதுத்துறை நிறுவனங்களையும், பஞ் சாலைகளையும் புனரமைக் கும் பொருட்டு மத்திய அரசு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும்.

இடஒதுக்கீடுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வழி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைகளில் புதுச்சேரி மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT