ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவராகப் பணிபுரிந்தவர் அர்ச்சனா சர்மா. இவரிடம் சிகிச்சை பெற வந்த பெண் நோயாளி ரத்தப்போக்கு அதிகரிப்பால் உயிரிழந்தார். இதனால் இவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அர்ச்சனா சர்மா மீது வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது.
இதனால் திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
முன்னதாக, திண்டுக்கல்லில் உள்ள இந்திய மருத்துவர் சங்கக் கிளை அலுவலகத்தில் இறந்த மருத்துவர் அர்ச்சனா சர்மாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர் சங்க திண் டுக்கல் கிளை தலைவர் மருத்துவர் மகாலட்சுமி, செயலாளர் மருத்து வர் கிறிஸ்டோபர்பாபு உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் உள்ள 290 தனியார் மருத்துவமனைகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இந்திய மருத்துவர் சங்கத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளைத் தலைவர் மனோகரன், செயலாளர் சிவா, பொருளாளர் சுகுமார் ஆகியோர் கூறுகையில், மருத்துவர்கள் மீதான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்ச்சனா ஷர்மா மறைவுக்கு ராமநாதபுரம் ரோட்டரி ஹாலில் இந்திய மருத்துவர் சங்கத்தின் ராமநாதபுரம் கிளை தலைவர் அரவிந்தராஜ் தலைமையில் மவுன அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவர் சங்க மாநில கவுன்சில் உறுப்பினர் சின்னதுரை அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.