தமிழகம்

திருப்பத்தூர் வேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் சேம்பரை கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகள்கள் பவித்ரா, சர்மிளா, துக்கன் என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுகந்தரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இதே விபத்தில் சுமார் 22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT