மதுரை/விருதுநகர்: விருதுநகர் பாலியல் வழக்கில் கைதாகி மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் அதேஊரைச் சேர்ந்த ஹரிகரன், அவரதுநண்பர்கள் ஜுனத் அகமது, பிரவீன்,மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மதுரை காமராசர்சாலையிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மதுரை கூர்நோக்கு இல்லத்திலுள்ள 4 மாணவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி நேற்று காலை வந்தார். 4 பேரிடமும் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின்போது சம்பவம் குறித்து யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களைப் பெற்றார்.
இந்த மாணவர்கள் யாருடைய மொபைல் போன்கள் மூலம் பாலியல் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர் என்பது குறித்தும் இவர்கள் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்குப் பிறகு 4 மாணவர்களும் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மீண்டும் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
வாக்குமூலம் பதிவு
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் கடந்த 2 நாட்களாக வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.
மேலும், ஹரிஹரன் உட்பட 4 பேரின் முகநூல் பக்கங்களை முடக்கிய சைபர் கிரைம் போலீஸார், அதில் பகிரப்பட்ட பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆய்வு செய்தனர்.