கோவில்பட்டி: தீப்பெட்டி பண்டல்கள் விலை உயர்வை வியாபாரிகள் ஏற்காததால், ஏப்.6 முதல் 17-ம் தேதி வரைஉற்பத்தியை நிறுத்தம் செய்வது என தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த 3 மாதங்களில் சுமார் 50 சதவீதம் உயர்ந்ததால், 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டலுக்கு ரூ.50 வீதம்விலை உயர்த்துவது என தீப்பெட்டிஉற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், தீப்பெட்டியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இந்த விலை உயர்வை ஏற்கவில்லை.
இதுதொடர்பான, ஆலோசனைக் கூட்டம் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்,தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறியதாவது: மூலப்பொருட்களின் கட்டுப்பாடில்லாத விலை ஏற்றம் காரணமாக, தீப்பெட்டி உற்பத்தி அடக்கவிலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதற்கான விலையை வியாபாரிகளிடம் இருந்து பெறமுடியாத சூழ்நிலையில், ஏப்.6முதல் 17-ம் தேதி வரை அனைத்துவகை தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் விடுப்பு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அறவழிப் போராட்டம் நடக்கிறது.
இப்பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்துவருகிறோம். இதில் ரூ.1 கோடி வரை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக செலுத்துகிறோம். எங்களிடம் கையிருப்பு அதிகமாக உள்ளது. வேலையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் பணம் வேண்டும். ஆனால், வியாபாரிகள் பழைய விலைக்கே கேட்பதால் உற்பத்தியை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளோம்.
சீன நாட்டில் இருந்து கள்ளத்தனமாக லைட்டர்கள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இதனால், 30% தீப்பெட்டி விற்பனை பாதிக்கப்படுகிறது. லைட்டர்கள் கடத்தி வரப்படுவதை, மத்திய அரசு தடுக்க வேண்டும். வட இந்திய பெரிய தொழிலதிபர்கள் எங்களை நசுக்குவதே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.