தமிழகம்

கடந்த 18 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ. 200 உயர்வு: திருப்பூர் தொழில்துறையினர் கடும் அதிருப்தி - மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: கடந்த 18 மாதங்களில் நூல் விலைகிலோவுக்கு ரூ.200 வரை உயர்ந்திருப்பதால், திருப்பூர் தொழில்துறையினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

நடப்பாண்டில் ஜனவரி மாதத்துக்கான நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டன. பிப்ரவரியில் ரூ.10 உயர்ந்தது. பஞ்சு விலை குறைந்தநிலையில், நூல் விலையில் எந்தவிதமாற்றமும் இன்றி பிப்ரவரி மாத விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலை அனைத்து ரகங்களும் ரூ.30 உயர்ந்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நுாற்பாலைகளை பொருத்தவரை, பஞ்சு விலையை அடிப்படையாகக் கொண்டு மாதம்தோறும் 1-ம்தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்ந்தது, தொழில்துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, பின்னலாடை நிறுவனங்கள் அடைப்பு, உண்ணா விரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ஓராண்டில் கிலோவுக்கு ரூ.180 நூல் விலை உயர்ந்துள்ளது. ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மற்றும் சாய ஆலைகள் உட்பட பின்னலாடை சார்ந்து இயங்கும் பல்வேறு பிரிவினரும், 40 சதவீதம் வரை விலை உயர்த்தியிருப்பதால், தொழில்துறையினர் பெரும் சிரமத்தை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

ஏப்ரல் நூல் விலை கிலோ விவரம்

20-ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) ரூ. 365, 24-ம் நம்பர் ரூ.375, 30-ம் நம்பர் நூல் ரூ.385, 34-ம் நம்பர் ரூ.405, 40-ம் நம்பர் ரூ.425, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நூல் ரூ.355, 24-ம் நம்பர் ரூ.365, 30-ம் நம்பர் ரூ.375, 34-ம் நம்பர் ரூ.395, 40-ம் நம்பர் ரூ.415.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறும்போது, "நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறக்கூடிய அபாயம்ஏற்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் கிலோவுக்கு ரூ.200 வரை ரகத்துக்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் சிறு, குறு நிறுவனங்கள்தான் 90 சதவீதம் உள்ளன. 10 சதவீதம் அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. பிரிண்டிங், எம்ப்ராய்டரி, டையிங் உள்ளிட்ட அனைத்தும், ஆடை உற்பத்தியாளர்களை நம்பித் தான் உள்ளன.

இதேநிலை நீடித்தால், உள்நாட்டுதேவைக்கே சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து பனியன் மற்றும் உள்ளாடைகளை இறக்குமதி செய்யக்கூடிய அபாயம்ஏற்பட வாய்ப்புண்டு. மூலப்பொருட்கள் விலை உயர்வு, பாலிபேக் உள்ளிட்ட அனைத்துக்கும் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், நூல்விலை உயர்வு என்பது இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த 18 மாதங்களில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.40 ஆயிரத்திலிருந்து, ரூ.1 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களின் நிலையை, பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "மாதந்தோறும் அதிகரித்துவரும் நூல் விலையானது, பின்னலாடை துறையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. கடந்த 18 மாதங்களில், வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளோம். சிறு, குறு நிறுவனங்கள் நூல் விலையேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.

பணப்புழக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 15 நாட்களில் ஒரு கேண்டிக்கு ரூ.15 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலை வரும்4-ம் தேதி சந்தித்து முறையிட உள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT