தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியிலேயே வேட்புமனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது உதவி ஆட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், அந்தந்த தொகுதி வட்டாட்சியர் நிலையில் உள்ள வருவாய்த் துறையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும். எனவே, மனுத் தாக்கல் செய்யும் நேரத்தில் அரசியல் கட்சியினரின் கூட்டத்தைக் கட்டுப் படுத்த போலீஸாருக்கு சிரமமாக இருக்கும்.
இதற்கிடையில், மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுத் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்தந்த தொகுதியில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியில் தலைமையிடத்தில் உள்ள சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுத் தாக்கல் தினத்தில் அந்தந்த தொகுதியில் இருந்து மனுக்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி களுக்கு மனுத்தாக்கல் செய்ய வேண்டிய அலுவலகங்கள் விவரம்:
1. செங்கம் (தனி): செங்கம் வட்டாட்சியர் அலுவலகம்.
2. திருவண்ணாமலை: தி.மலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.
3. கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்.
4. கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம்.
5. போளூர்: போளூர் வட்டாட்சியர் அலுவலகம்.
6. ஆரணி: ஆரணி வட்டாட்சியர் அலுவலகம்.
7. செய்யாறு: செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம்.
8. வந்தவாசி (தனி): வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கான அலுவலகங்கள் விவரம்:
1. அரக்கோணம் (தனி): அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம்.
2. சோளிங்கர்: நெமிலி வட்டாட்சியர் அலுவலகம்.
3. காட்பாடி: காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம்.
4. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.
5. ஆற்காடு: ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம்.
6. வேலூர்: வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.
7. அணைக்கட்டு: அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம்.
8. கே.வி.குப்பம் (தனி): கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம்.
9. குடியாத்தம் (தனி): குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம்.
10. வாணியம்பாடி: வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம்.
11. ஆம்பூர்: ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம்.
12. ஜோலார்பேட்டை: நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம்.
13. திருப்பத்தூர்: திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம்.
இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் பகல் 3 மணிக்குள் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்பாளர் உள்ளிட்ட 5 பேருடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுத் தாக்கல் செய்யப்படும் அலுவலகத்துக்கு அந்தந்த பகுதி துணை காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மனுத் தாக்கல் செய்யும் அலுவலகத் துக்கு 100 மீட்டர் வரை வேட்பாளருடன் 3 வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்துக்காக தனியாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலை அளிக்க வேண்டும். அந்தக் கணக்கின் வழியாகவே தேர்தல் செலவினங்களுக்கான பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர்களின் பெயரும் சின்னமும் இடம்பெற உள்ளன. எனவே, ஸ்டாம்ப் அளவு புகைப்படம் அளிக்க வேண்டும். வேட்பாளரின் புகைப்படத்தின் பின்பக்கம் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்’’ என்றனர்.