தமிழகம்

கட்சியின் மூத்த நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு தேர்தலின்போது வந்தோருக்கு முக்கிய பதவியா? - திண்டுக்கல் நகர திமுகவில் திடீர் சலசலப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தேர்தலின்போது கட்சிக்கு வந் தோருக்கு மாநகராட்சியின் முக்கியப் பதவிகளை வழங்கி விட்டு, கட்சிக்காக உழைத்த மூத்த வர்களைப் புறக்கணித்துவிட்டதாக திமுக கவுன்சிலர்கள் ஆதங்கப் படுவதால், திண்டுக்கல் நகர திமு கவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் மண்டலத் தலைவர்களாக 4 பேர் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை யில், தமிழக மாநகராட்சிகளில் எங்குமே கூட்டணிக்கு ஒதுக்காத போது திண்டுக்கல்லில் ஒரு மண்டலத் தலைவர் பதவியை காங்கிரஸுக்கு உள்ளூர் திமுக நிர்வாகிகள் தாரைவார்த்தது திமுக கவுன்சிலர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. மீதமுள்ள 3 மண்டலத் தலைவர் பதவிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார், நகரச் செயலாளர் ராஜப்பா ஆகி யோரது பரிந்துரையில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து நிலைக்குழுத் தலைவர் பதவியை எதிர் பார்த்துக் காத்திருந்த மூத்த கவுன்சிலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலின்போது புதி தாக கட்சிக்கு வந்து போட்டியிட்டு வென்றவர்களுக்கு நிலைக் குழுத் தலைவர் பதவிகள் வழங்கப் பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

கணக்குக் குழு தலைவராக முகம்மதுசித்திக், பொது சுகாதார குழுத் தலைவராக வி.இந்திராணி, கல்விக்குழுத் தலைவராக ஓ.சரண்யா, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவராக ஜெ.சுவாதி, நகரமைப்புக் குழுத் தலைவராக பெ.சாந்தி, பணிக் குழு தலைவராக ஆர்.சுபாஷ் ஆகி யோர் நியமிக்கப்பட்டனர்.

இதில் முகமது சித்திக் தவிர, அனைவரும் கட்சிக்குப் புது முகங்கள். தேர்தலுக்கு முன்பு இவர்களை யார் என்று கட்சியி னருக்கே தெரியாது. இவர்கள் கட்சியின் செயல்பாடுகள், போராட் டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற் காதவர்கள். ஆனால், கடந்த காலங்களில் கட்சியின் நிகழ்ச் சிகள், பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று கட்சிப் பொறுப்பில் உள்ள மூத்த கவுன் சிலர் ஜானகிராமனுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

இதேபோல் மூத்த கவுன்சிலர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டு கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது திண்டுக்கல் நகர திமுகவில் திடீர் சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது.

முதன்முறையாக, திண்டுக் கல்லில் திமுகவின் ஒற்றுமை கலைந்து கவுன்சிலர்களின் எதிர்ப்பால் கட்சி அறிவித்த நிய மனக் குழு உறுப்பினரையே மாற்ற வேண்டிய நிலை ஏற்பட் டதால் திண்டுக்கல் நகர திமுக நிர்வாகிகள் பின்வாங்கினர்.

கிழக்கு மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர் ஆகியோர் பட்டியல் தயாரித்து பதவிகள் வழங்கியதால்தான் இந்த குழப்பம் என குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் முறையிட்டு தகுதியானோருக்கு மட்டுமே பதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கச் செய்வோம் என்கின்றனர் அதிருப்தி திமுக கவுன்சிலர்கள்.

நீங்கள் கொடுக்கும் உறுப்பினர் பதவி எங்களுக்கு வேண்டாம் என திமுக கவுன்சிலர் இருவர் புறக்கணிப்பும் செய்துவிட்டனர்.

கடந்த காலங்களில் நிர்வாகிகள் உத்தரவை முழுமையாகக் கடைப்பிடித்து கட்டுக்கோப்பாக இயங்கி வந்த திண்டுக்கல் நகர திமுகவில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அமைச்சர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் அதிருப்தி கவுன்சிலர்களும், கட்சியினரும் உள்ளனர்.

SCROLL FOR NEXT