‘‘பணப்பதுக்கல் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான புகார்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஆன்லைனில் புகார் வந்ததை அடுத்து வருமானவரி புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 72 லட்சம் சிக்கியது. இதுபோல், பல்வேறு இடங்களில் வந்த தகவல்கள் அடிப்படையில், தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பணம் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தேர்தல் செலவினம் தொடர்பாக கண்காணிக்க வந்த 124 பார்வையாளர்கள் பணிகளை தொடங்கி விட்டனர். ஏற்கெனவே வந்த 12 பார்வையாளர்கள் 24-ம் தேதி பணிகளை முடித்து திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் அவர்களை 29-ம் தேதி வரை தமிழகத்தில் பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்தில் உள்ள மாவட்ட எஸ்பிக்களுடன் தேர்தல் ஆணையர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்றார்.