தமிழகம்

மாணவர் சேர்க்கை அதிகமுள்ள கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: ஏஐசிடிஇ அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பொறியியல் கல்லூரிகள் 25 சதவீதகூடுதல் இடங்களை உருவாக்கி கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான அங்கீகார வழங்கல் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழும், 2-ம் ஆண்டில் டிப்ளமோவும், 3-ம் ஆண்டில்தொழிற்கல்வி சான்றும், 4-ம் ஆண்டில் இளநிலை பட்டப் படிப்புக்கான சான்றும் பெறுவார்கள். மேலும், மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு கல்லூரியில் படிப்பை தொடரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புதிதாக பொறியியல்கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுகள், 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் கோடிவருவாய் கொண்ட நிறுவனங்கள், 25 ஆண்டுகளுக்கு மேலான தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறைந்தது 10 ஆயிரம் மாணவர்கள் உள்ள கல்லூரி நிர்வாகங்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து தளர்வு அளிக்கப்படவுள்ளது.

அதேபோல், 95 சதவீதத்துக்கு மேல் சேர்க்கை உள்ள கல்லூரிகளில் 25 சதவீதமும், 80 சதவீதத்துக்கு மேல் உள்ள நிறுவனங்களில் 15 சதவீதமும் கூடுதல் இடங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT