தமிழகம்

சேலம் | அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விண்ணப்பிக்க அழைப்பு: ஏப்.11, 12-ல் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

சேலம்: ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடு கோரி விண்ணப்பிக்கலாம்,’ என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு வட்டம், சேலம் வட்டம், வாழப்பாடி வட்டம் மற்றும் எடப்பாடி வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வீடுகளை ஒதுக்கீடு செய்ய வரும் 11, 12-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டுத் தொகையான அந்தந்த திட்டப்பகுதிக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை வாரியத்துக்கு முன் பணமாக செலுத்த வேண்டும். மேலும், குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடமாட்டேன் என்றும் உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் 144 வீடுகள், எடப்பாடி பகுதியில் 352 வீடுகள், நரசோதிப்பட்டி அவ்வை நகர் பகுதியில் 336 வீடுகள், சேலத்தாம்பட்டி பகுதியில் 496 வீடுகள் (அனைத்து வகுப்பினரும்) மற்றும் மணக்காடு திடீர் நகர் பகுதியில் 636 வீடுகள் (ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு மட்டும்) பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

எனவே, முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் பகுதியில் உள்ளவர்கள் சேலத்தாம்பட்டி அவ்வை நகர் பகுதியில் உள்ளவர் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம், திடீர் நகர் பகுதியில் உள்ளவர்கள் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT