மதுரையில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் இந்து துறவியர், ஞானியர் மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் விளக்குகிறார் விசுவ இந்து அகில பாரத பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே. உடன் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், மாநிலச் செயலாளர் ஞானகுரு. படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

கோயில் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை:தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொது செயலர் மிலிந்த்பரண்டே நேற்று குரோம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஷ்வ இந்து பரிஷத்தின் வரலாற்றுசிறப்புமிக்க மாநாடு, ஜூன் 24முதல் ஜூன் 26 வரை, காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. ஜூன் 4, 5தேதிகளில், மதுரையில் அகிலபாரத இந்து துறவிகள், இந்து யோகிகள் மாநாடும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்து சமுதாயத்துக்கு பல சவால்கள் உள்ளன. இதுகுறித்து விவாதிக்க நாடு முழுவதிலும் இருந்து பலர் தமிழகத்துக்குவர வேண்டும். எத்தனையோ கோயில்கள் தமிழகத்தில் இடிக்கப்பட்டாலும், தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் அரசு வழங்க வேண்டும். நம் நாட்டில் ஆறு மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் சரியான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மதம் மாறிய எந்த பழங்குடி சமூகமும் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறக் கூடாது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால், பழங்குடியினர் பலர்மதமாற்றம் செய்த பின்பும் இடஒதுக்கீட்டு பலனைப் பெற்று வருகின்றனர். வெளிநாட்டு விரோத சக்திகளின் ஆதரவுடன் நடைபெறும் மதமாற்ற தொழில் இந்துக்கள் மற்றும் நம் நாட்டுக்கு எதிரானது. பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மதமாற்ற முயற்சிகளுக்காக தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இத்தகைய மதமாற்றங்களைத் தடுக்க மதமாற்ற தடைச் சட்டத்தால் மட்டுமே முடியும். அதுவே நம் தேசத்தின் கலாச்சாரத்தையும், நம் பாரம்பரியம் மற்றும் மக்களையும் பாதுகாக்க உதவும். கோயில்களுக்கு தானமாக அளிக்கப்படும் தங்கங்களுக்கு கடவுள்தான் உரிமையாளர். அரசு உரிமையாளர் கிடையாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அகில பாரத இணை பொது செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், மாநில தலைவர் சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT