கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுகவில் மனுத்தாக்கல் செய்த பலரும் தற்போதே தனித்தனியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தரப்பில், கன்னியாகுமரி தொகுதியில் மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரத்தை அக்கட்சி களமிறக்கி உள்ளது. இதைப்போல் பாஜகவும் மாவட்டத்துக்கு நன்கு அறிமுகமான மீனாதேவை நிறுத்தியுள்ளது. இவர்கள் இருவருமே இந்து வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
ஆஸ்டின் விருப்பம்
இவர்களுக்கு கடும் போட்டியை கொடுக்க வேண்டிய நிலையில் திமுக உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின், தாமரைபாரதி, சாய்ராம், பார்த்தசாரதி உட்பட பலர் விருப்பமனு கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் களம் இறங்கினால் போட்டி பலமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. நாகர்கோவில் தொகுதியை கேட்கும் சுரேஷ்ராஜனை கன்னியாகுமரி தொகுதியில் நிறுத்தவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பு
இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே விருப்பமனு செய்த பலர், தாங்கள் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தனது சொந்த ஊரான சியோன்புரம், ஆத்திக்காட்டுவிளை போன்ற பகுதிகளில் ஆஸ்டின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் தாமரைபாரதி, பார்த்தசாரதி, சாய்ராம் ஆகியோர் பஞ்சலிங்கபுரம், மயிலாடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றி தான் முக்கியம்
சாய்ராம் கூறும்போது, ‘திமுகவுக்கு வாக்கு கேட்கும் பணியை முன்கூட்டியே வேகப்படுத்தியுள்ளோம். மற்றபடி வேட்பாளர் என நினைத்து பணியில் இறங்கவில்லை. கட்சி தலைமை அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்’ என்றார் அவர்.
‘திமுகவின் வெற்றியே எங்களுக்கு முக்கியம். அதற்காக தான் வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பே வீடுவீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறோம்’ என, தாமரை பாரதி தெரிவித்தார்.
ஆஸ்டின் கூறும்போது, ‘கன்னியாகுமரி, தமிழகத்தின் முக்கிய தொகுதி என்பதால் இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தற்போது திமுகவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது.
இங்கு அனைத்து தரப்பினரும் எங்களை ஆதரிக்கும் நிலை உள்ளது. எனவே தான் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார் அவர்.
இதுபோன்ற பரபரப்பான சூழலால் கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் திருவிழா முன்கூட்டியே களைகட்டத் தொடங்கியுள்ளது.