தமிழகம்

வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இந்தசங்கத்தில் பாம்பு பிடிக்கும் உரிமம் பெற்ற 343 பேர் உட்பட 423 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், வனத்துறையினர் அனுமதி பெற்று பாம்பு பிடித்து பண்ணைக்கு கொண்டு வந்து வழங்குவர். பாம்பின் வகைக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும்.

மேலும், இவ்வாறு பிடித்து வரப்படும் பாம்புகளில் இருந்து வி‌ஷம் எடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பாம்புபண்ணையில் வி‌ஷம் எடுப்பதைப் பார்க்க சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30 மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.18 வசூலிக்கப்படுகிறது. செல்போன் மற்றும் கேமராமூலம் புகைப்படம் எடுக்கவும் கட்டணம்வசூலிக்கின்றனர். இந்நிலையில், கடந்த2 மாதங்களாக பாம்புகளைப் பிடிப்பதற்கான வனத்துறையின் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை.

பண்ணையில் ஏற்கெனவே பராமரிப்பில் இருந்த பாம்புகள் அனைத்தும் வனப்பகுதியில் விடப்பட்டு, கடந்த 2மாதங்களாக பண்ணையும் மூடப்பட்டிருந்தது. இதனால், பாம்புகளைப் பிடிப்பதற்கான அனுமதியை விரைவாக வழங்கவேண்டும் என இருளர் மக்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில், வனத்துறை சார்பில் நேற்று முன்தினம் பாம்புகளைப்பிடிப்பதற்கான அனுமதி வழங்கி, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, பூஞ்சேரி, குன்னப்பட்டு, மானாம்பதி, பட்டிபுலம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தஇருளர்கள் கொடிய விஷம் கொண்டசுருட்டை, கண்ணாடி விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளைப் பிடித்து பண்ணைக்கு கொண்டுவந்தனர். பண்ணையின் ஊழியர்கள்,பாம்புகளின் எடை, இனத்தை அடையாளம் கண்டுவிஷம் எடுப்பதற்காக பானைகளில் பாதுகாப்பாக அடைத்து வைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட சில நாட்களுக்குப்பிறகு பிடித்து வரப்பட்ட பாம்புகள், வனப்பகுதியில் மீண்டும் விடப்படும். பண்ணைக்கு மீண்டும் பாம்புகள் கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் முதல் பாம்புகளில் இருந்து வி‌ஷம் எடுக்கப்படுவதைப் பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, பாம்பு பிடிக்கும் இருளர்கள் கூறியதாவது: பாம்புகள் ஏப்ரல்முதல் ஆகஸ்ட் வரை இனப் பெருக்கம்செய்யும் என்பதால், இந்த நாட்களில்பாம்புகளை பிடிக்க அனுமதி இல்லை.தற்போது ஏப். 20 வரை மட்டுமே பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT