தமிழகம்

ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல்: 9 பேரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மதுரை: ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 9 பேரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கோரிப்பாளையம், ராமநாதபுரம் திருவாடனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பேசியவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பலரை கைதும் செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த அசன்பாட்ஷா, அபிபுல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், மனுதாரர்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் மனுதாரர்கள் எதுவும் பேசவில்லை. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

அரசு தரப்பு எதிர்ப்பு

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸாரிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. திடீரென டிராக்டரை மேடையாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒலிபெருக்கி பயன்படுத்தினர்.

மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் உள்ளன. நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT