கோவை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரிடம் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக கோவையில் குறிப்பிட்ட சில அமைப்புகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கோவையின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால், கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதுபோன்ற சம்பவங்கள், கோவையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலமாக சில அமைப்புகள் வெளியிடும் சுவரொட்டிகளில் மத வன்மத்தை தூண்டும் வாசகங்கள் இடம் பெறுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரத்தை, மையப்படுத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. இது கோவையின் அமைதியை பாதிக்கும். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கக்கூடாது. கோவையின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார், செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.