கோவை: வீடுகளில் 100 சதவீதம் சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும் என மும்பை ஐஐடி பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் ‘சோலார் மனிதர்’ என அறியப்படுபவருமான சேத்தன் சிங் சோலங்கி தெரிவித்தார்.
கோவை மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் மின்னியல்துறை, நானோ தொழில்நுட்ப துறை ஆகியவை சார்பில் சூரிய மின்சக்தி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேத்தன் சிங் சோலங்கி மாணவர்களிடையே பேசியதாவது:
ஐஐடியிலிருந்து சம்பளம் இல்லா விடுப்பு எடுத்துக்கொண்டு கடந்த நவம்பர் முதல் ‘எனர்ஜி சுவராஜ் யாத்ரா’ எனும் பயணத்தை எனது சோலார் பேருந்து மூலம் மேற்கொண்டு வருகிறேன். அந்த பேருந்தின் மேற்கூரையில் 3.2 கிலோ வாட் சோலார் பேனல், 6 கிலோ வாட் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தில் உள்ள விளக்குகள், மின்அடுப்பு, பயன்படுத்தும் டிவி, ஏசி, லேப்டாப் ஆகியவை சூரிய மின்சக்தி மூலமே இயங்குகின்றன. இன்ஜின் மட்டும் பெட்ரோலில் இயங்குகிறது.
காலநிலை மாற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், மக்களை 100 சதவீதம் சூரிய மின்சக்தியை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கம். வரும் 2030-ம் ஆண்டு வரை எனது வீட்டுக்கு செல்லாமல் பேருந்து மூலம் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இதுவரை 7 மாநிலங்களில் 17 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து, சுமார் 55 ஆயிரம் மக்களை சந்தித்துள்ளேன்.
நாம் 80 முதல் 85 சதவீதம் புதைபடிவ எரிபொருட்களையே பயன்படுத்தி வருகிறோம். இதுவே காலநிலை மாற்றத்துக்கு காரணமாகிறது. ஐபிசிசி அறிக்கையின்படி இன்னும் 7 முதல் 9 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1.50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும்.
மேலும், மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏராளமான பணத்தை அரசு செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு எரிசக்தியை சுயசார்பாக நாமே வீடுகளில் உற்பத்தி செய்துகொள்வதுதான்.
சூரியமின்சக்தியை 100 சதவீதம் வீடுகளில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். ஏசி, குளிர்சாதனபெட்டி போன்றவற்றை பயன்படுத்துவோர் அதை மூன்றில் ஒருபங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். எரிசக்தியை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்து என்பது குறித்து தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் http://learn.energyswaraj.org/ என்ற இணையதளத்தில் மூலம் இலவச பயிற்சி வகுப்பில் இணைந்து மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக டீன் எம்.சரவணக்குமார், மின்னியல் துறைத் தலைவர் டி.அருள்தாஸ் ஆல்பர்ட் விக்டோரி, உதவிப் பேராசிரியர் ஆர்.பாலமுருகன், நானோ தொழில்நுட்ப துறைத்தலைவர் கே.ராஜசேகர், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.