அண்ணா சாலை | கோப்புப் படம் 
தமிழகம்

அண்ணா சாலையில் முதல்வரை வரவேற்று வைத்திருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்து விபத்து

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்துள்ளது. இதில், பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவ கருவிகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது, முதல்வரை வரவேற்கும் வகையிலும், நிகழ்ச்சி நடைபெறுவதை தெரிவிக்கும் வகையிலும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அலங்கார வளைவு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிவடைந்த சிறிது நேரத்தில் அந்த அலங்கார வளைவு திடீரென சரிந்தது.

இதில், பெண் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார். மேலும், அந்த வழியாக சென்ற ஒருவரின் சட்டையும் கிழிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. காற்றின் காரணமாக அலங்கார வளைவு சரிந்து விழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்

SCROLL FOR NEXT