மூதாட்டியின் நிலை அறிந்து காலணி வாங்கி கொடுத்த போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி வெகுமதி வழங்கி பாராட்டினார். 
தமிழகம்

மூதாட்டிக்கு காலணி வாங்கி கொடுத்த போக்குவரத்து காவலருக்கு ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூர்: சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28-ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும்வெயிலில் நடந்து வந்த மூதாட்டியைப் பார்த்துள்ளார்.

மூதாட்டியும் வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் மூதாட்டிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, கையில் இருந்த ரூ.20 பணத்தை கொடுத்துள்ளார்.

அப்போது பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுவதாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ஜான்சன் புருஸ்லீ சிறிது நேரத்தில்காலணி வாங்கி வந்துமூதாட்டிக்கு அளித்தார். மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி, ஆசி வழங்கி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

“எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள 2 சிக்னலில்தான் இருப்பேன்” என மூதாட்டியிடம் கூறிய காவலரை சக காவலர்களும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் ஜான்சன் புருஸ்லீயின், நற்செயலை அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அவரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிபாராட்டினார்.

SCROLL FOR NEXT