காங்கிரஸ் கட்சியில் தனி குழுக்களாக இயங்கி வரும் கோஷ்டியினர் அவரவர் ஆதரவாளர்களுக்கு தொகுதியைப் பெறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
ப.சிதம்பரம் அவரது ஆதரவாளர்களுக்காக 8 தொகுதிகளை கேட்டு அகில இந்திய நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி கிழக்கு, முசிறி, சிவகங்கை, திருமயம், கடலூர், கோவை மாநகரில் ஒரு தொகுதி, சென்னையில் 2 தொகுதிகள் என 8 தொகுதிகளை கேட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் தங்கபாலு 8 லிருந்து 10 தொகுதிகள் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாராம். முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அவரது மகன் விஷ்ணு பிரசாத்துக்காக செய்யாறு தொகுதியை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாராம். வசந்தகுமார் தனக்கும் தனது ஆதரவாளர் ஒருவருக்கும் தொகுதி ஒதுக்கித் தர வேண்டும் என மேலிடத்தில் அணுகியுள்ளாராம்.
இவர்கள் தவிர எந்த அணியிலும் சேராமல் தனி ஆவர்த்தனம் செய்து வரும் டாக்டர் செல்லக்குமார் அவரது ஆதரவாளர் ஒருவருக்காகவும், தற்போதைய எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி-விளவங்கோடு, கோபிநாத்-ஓசூர், பிரின்ஸ் -குளச்சல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனராம்.
கட்சித் தலைவரான இளங்கோவன் ‘கட்சியில் போட்டியிட விரும்பி ஏற்கனவே விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே இம்முறை தொகுதிகள் ஒதுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். டெல்லி மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் இளங்கோவன் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிக்க முடியாது. அதனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி தலைவர்கள் அவர்களுக்கு டெல்லியில் பரிச்சயமான மேலிட நிர்வாகிகளை அணுகி அவரவர் ஆதரவாளர்களுக்கு தொகுதி பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தவிர காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறுபான்மையினர் பிரிவினர் கட்சிக்குள் இப்போது கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியது:
காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இம்முறை 10 சதவீதம் சிறுபான்மையினர் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கும் அனுப்பி வருகின்றனர்’ என்றார்.
தி.மு.கவில் 41 தொகுதிகளைப் பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் கட்சிக்குள் சிக்கல் இல்லாமல் தொகுதிகளை ஒதுக்குவது கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.