தூத்துக்குடி: சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி நேற்று தொடங்கியது.
செப்டம்பர் வரை 6 மாதங்கள் நடைபெறும் இப்பணியில், தமிழர்நாகரீகத்தின் பழமையை உலகுக்குஉணர்த்தும் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2-ம் கட்ட அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பாக, கடந்த 2 ஆண்டுகளாக இரண்டு கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. சிவகளை பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
குழந்தைகள் விளையாடும் வட்டமான சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மிக்குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி என ஏராளமானப் பொருட்கள் கிடைத்தன.
3,200 ஆண்டுகள் பழமை
ஆவாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டியன் திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத்தன. மேலும், சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்று தெரியவந்தது.
இந்நிலையில், ‘தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் தமிழகதொல்லியல் துறை சார்பில்அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும்’ என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்று தொடங்கின. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
இப்பணிக்கு 6.22 ஹெக்டேர் நிலம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகழாய்வுப்பொருட்களை காட்சிப்படுத்த, இங்கு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தஅருங்காட்சியகம், திருநெல்வேலியில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துடன் இணைந்ததாக இருக்கும். பொதுமக்கள் நேரடியாக இங்கு வந்து பார்ப்பதற்கு சாலை வசதிகள் செய்யப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் கூறும்போது, “இந்த அகழாய்வுப் பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார்.
அகழாய்வு இணை இயக்குநர் விக்டர் ஞானராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி, ஏரல் வட்டாட்சியர் கண்ணன், சிவகளை ஊராட்சி மன்ற தலைவர் பிரதீபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்றோ, சுரேஷ், வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.