மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே மயிலாப்பூரில் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 8.45 மணியிலிருந்து 9.50 மணிக்குள் நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து காலை 7.45 மணிக்கு கலச புறப்பாடு நடக்கவுள்ளது. பின்னர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சுப்பிரமணியர் உட்பட அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஏராளமான முன் ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் காவல்துறை செய்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதலே வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்து வருகிறார்கள். இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 39 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கி டாக்கி வசதியுடன் 2 ஆம்புலன்ஸ்களும், 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுமார் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மயிலாப்பூர் சாய் பாபா கோயில் அருகேயுள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் அருகேயும், பி.எஸ்.பள்ளி மைதானத்திலும், லஸ் சர்ச் சாலையில் உள்ள அமிர்தாஞ்சன் கட்டிடம் அருகேயும் வாகனங்களை நிறுத்திக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். சன்னதி தெரு, மாட வீதிகளில் வாகனங் களை நிறுத்த அனுமதி இல்லை.
இந்த கும்பாபிஷேகத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், மா.கவிதா, இரா.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.