சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரனட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வனிதா, 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற போதும், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றார். ராகினியின் தந்தை, வாக்குச் சீட்டுகளை பறித்து ரகளையில் ஈடுபட்டதால் தனக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற்றதாக கூறி, சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக போட்டி வேட்பாளரான வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டதில் மனுதாரர் வெற்றி பெற்றது தெரிய வந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும், ரகளையில் ஈடுபட்ட ராகினியின் தந்தைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

          
SCROLL FOR NEXT