திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வந்து சென்றதையடுத்து திருவள் ளூர் மாவட்டத்தில் திமுக வேட்பா ளர்களின் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக வேட்பாளர் பட்டி யலை அறிவித்ததால் அக்கட்சி வேட்பாளர்கள் உடனடியாக தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முன்னெடுக்க அதிமுகவினர் மும்முரமாக உள்ளனர்.
திமுக சற்று காலம் தாழ்த்தியே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் உடனடியாக தங்களது பிரச்சாரத்தை தொடங்கவில்லை. அவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள விஐபிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சில வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்த திமுக வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து, ஆவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சா.மு.நாசர் கூறியதாவது: ‘நமக்கு நாமே’ பயணத்தின் மூலம் ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்து அனைத்து தரப்பு மக்களையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அவரது பயணம் மக்கள் மனதில் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த போது மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி காணப்பட்டது. அவரது வருகை எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இதனால் நாங்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.