“குழிக்குள்ள இருட்டா இருந்துச்சு..”என்று தனது பயங்கர அனுபவத்தை மழலை மொழியில் தெரிவிக்கிறான் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஹர்சன்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவிலுள்ள படுக்கையில் கார், பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவனை பார்க்க அடுத்தடுத்து உறவினர்களும் ஆசிரியர்களும் அலுவலர்களும் அதிகாரிகளுமாக அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். அவர்களெல்லாம் அவனைக் கொஞ்சியபோது அவர்களுடன் சிரித்துப் பேசினான். அவனிடம் நாமும் விளையாட்டாகவே பேச்சுக்கொடுத்தோம்.
”அப்பாவோட பைக்கில் இருந்து இறங்கி ஓடினேனா. அப்பா வர்றதுக்குள்ள குழிக்குள்ள விழுந்துட்டேன். குழிக்குள்ள இருட்டா இருந்துச்சு. பயமாவும் இருந்துச்சு.. அப்பாவும், அம்மாவும் மாறிமாறி என்னோட பேசினாங்க..அப்புறமா தண்ணியும், ஜூசும் குடிச்சேன். மாமாவெல்லாம் தூக்கி என்ன இங்கு கொண்டு வந்தாங்க. ஊசியின்னா பயம். வீட்டுக்குப்போணும்” என்று மழலை மொழியில் ஹர்சன் பேசிக்கொண்டிருந்ததை வெகுவாகவே அங்கிருந்தவர்கள் ரசித்தனர். ”அப்பா வீட்டுக்கா போகணும்?” என்று அவனது மாமா கண்ணன் அவனிடம் கேட்கிறார். ”பாட்டி வீட்டுக்கு போணும்” என்கிறான் ஹர்சன்.
தாத்தா பாட்டி என்றால் அவனுக்குக் கொள்ளை பிரியம். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில்தான் தாத்தா பத்மநாபன், பாட்டி அமுதா ஆகியோரின் வீடு உள்ளது. அவர்கள் பராமரிப்பில்தான் பிறந்து ஒன்றரை வயதுவரை ஹர்சன் வளர்ந்திருக்கிறான். அதனால்தான் அங்கு செல்ல அவனுக்கு பிரியம் என்று விவரித்தார் அவனது மாமா கண்ணன். இதனால் மாமாவின் கார் சாவியை பறித்து வைத்துக்கொண்டிருந்தான் ஹர்சன்.
தன்னைப் பார்க்க மருத்துவ மனைக்கு வந்தவர்களெல்லாம் நலம் விசாரித்துவிட்டு கிளம்பும் போது ”பை..பை” என்று கையசைத்து மகிழ்ச்சி தெரிவிக் கிறான். நம்மையும் பார்த்து கையசைக்கிறான். நாமும் மகிழ்ச் சியுடன் வெளியே கிளம்பினோம்.
ஆழ்துளை குழியில் விழுந்தது, அதிலிருந்து போர்வெல் ரோபோ மூலம் மீட்கப்பட்டதில் இரு கைகளின் தோள்பட்டை பகுதிகளிலும், காதுகளையொட்டியும் லேசான சிராய்ப்பு காயங்கள் அவனது உடலில் காணப்படுகின்றன. தலையைத் தொடும்போது மட்டும் வலிக்கிறது என்று அழுகிறான். மற்றபடி வீட்டில் விளையாடு வதுபோல் விளையாட்டு பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோத னைகளும் செய்யப்பட்டு விட்டன. எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவமனை மருத்துவர்களும் தெரிவித்தனர். குழிக்குள் 6 மணிநேரமாக இருட்டில் இருந்ததால் இன்னும் மிரட்சி முழுமையாக அகலவில்லை. பலர் அவனைப் பார்க்க கூட்டம் கூட்டமாக வரும்போது என்னவோ ஏதோ என்று அவனுக்குள் பயம் வந்துவிடுகிறது. மற்றபடி சர்வசாதாரணமாகவே அவன் இருப்பது குறித்து அவனது பெற்றோர் வி. கணேசன்- தமிழ்செல்வி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். செவ்வாய்க் கிழமை மாலையில் பரிசோத னைகளுக்குப்பின் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
ஹர்சனை வாழ்த்தும் தந்தை கணேசனுடன் பணிபுரியும் சக ஆசிரியைகள்.