கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய அரசு ஜெயலலிதா அரசு என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ராயபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனோவை ஆதரித்து, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைத் தேடி வருவார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைத் தேடி வருபவர்களாக நாங்கள் இருக்கிறோம். கூட்டத்தில் பங்கேற்கும் வேட்பாளர்களை கொத்தடிமைகள் போன்று நடத்துகிறார். நாங்கள் கூட்டணி வேட்பாளர்களைக்கூட சுயமரியாதையுடன் நடத்துகிறோம்.
மழை வெள்ளத்தின்போது சென்னையில் மேயர், ஆளுங்கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் யாரையும் காணவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.23 ஆயிரம் கோடி செலவிட்டதாக கூறுகின்றனர். அவ்வாறு செலவிட்டிருந்தால், சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்காது.
அவர் பிரச்சாரத்தில் படிக்கும் தகவல்கள் அனைத்தையும் மாநில தலைமைச் செயலர் ஞானதேசிகன் எழுதி கொடுக்கிறார். ஜெயலலிதா யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறிக்கொண்டு, அரசு தலைமைச் செயலர், டிஜிபி, உளவுத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாக ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் பொய்யான தகவலை கூறி வருகிறார். உண்மையில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது திமுக ஆட்சி காலத்தில்தான். கிரானைட் விவகாரம் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்தவர்தான் அவர்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த டிராஃபிக் ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது தொடர்பாக விசாரணை நடத்த சகாயத்தை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தோற்றவர் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. கிரானைட் முறைகேடு விவகாரத்தை விசாரிக்க இந்த அரசு ஒத்துழைக்கவில்லை என்று சகாயம் கூறியுள்ளார். அவர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், இதை சிபிஐ விசாரிக்க உத்தரவிடலாமா என்று உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு, இந்த அரசு 5 மாதங்களாக பதில் அளிக்காமல் உள்ளது. இந்த நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக நான்தான் விசாரணைக்கு உத்தரவிட்டேன் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் 501 வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.