கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் பொதுவசதி மைய மான ‘வள்ளலார் மையம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வரவேற்றார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கையநாயுடு, மாணவர்கள் பொது வசதி மையத்தை திறந்து வைத்தார். குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவரும், பேராசிரியருமான கே.ஆறுமுகத் துக்கு அருட்செல்வர் என்.மகாலிங்கம் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
உலக அளவிலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடுகளில் நமது நாட்டின் பங்களிப்பு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. கல்வித் துறைக்கு மத்திய அரசு இரு பெரும் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தலா 10 பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும், ஆராய்ச்சிப் படிப்பையும் பெறும் வசதிகளை ஏற்படுத்துகிறது.
போக்குவரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் பெரிய அளவில் முன்னேற்றத்தை நாடு சந்தித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள பெரு நிறுவனங்களிலும் இந்தியர்களே அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், மாஸ்டர்கார்ட், பெப்ஸி கோ, காக்னிசண்ட், நோக்கியா என அனைத்து முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளிலும் இந்தியர்களே இருக்கின்றனர். இதுவே இந்தியாவின் மனிதவளத்துக்கும், வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டு.
தமிழுக்கு முக்கியத்துவம்
இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டம் இது. அதற்கான முயற்சியை கல்வி நிறுவனங்கள் கையில் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிற மொழிகளை விட தத்தம் தாய்மொழிகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆங்கிலம் நல்ல மொழிதான். ஆனால் அதைவிட தமிழ் மக்கள், தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
தமிழகத்தில் இனி ‘பையா’ ஆட்சி!
கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
இப்போதுள்ள நிலையில் கம்யூனிஸ்ட்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வைகோ போன்றவர்கள் காலாவதியாகிவிட்டனர். திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள் மாறி, மாறி பார்த்து சலித்து விட்டனர். அய்யா, அம்மாவுக்கு அடுத்து ‘பையா’ (மோடி அண்ணா என்பதை இந்தியில் பையா எனக் குறிப்பிட்டார்) ஆட்சி தமிழகத்தில் அமைய இருக்கிறது. பாஜக மட்டுமே நிலைத்த, நீடித்த ஆட்சியை வழங்க முடியும். இந்தியாவில் உள்ள கட்சிகள், பல பெயர்களில் பிரிந்து கிடக்கும் வேளையில் பாஜக மட்டுமே நிலையாக, ஒரே பெயரில் 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரிய கட்சியாக விளங்குகிறது என்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘தமிழக முதல்வரை சந்திக்க முடிவதில்லை என மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருப்பது அவர்களது தனிப்பட்ட அனுபவம். நான் 2 முறை மாநில பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருக்கிறேன்’ என்றார்.