தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார். (அடுத்த படம்) தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். 
தமிழகம்

தூத்துக்குடியில் மக்களை பிளவுபடுத்த சதி நடப்பதாக குற்றச்சாட்டு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் போராட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு எதிராக எஸ்பியிடம் அவர்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் நேற்று முன்தினம் சிலர் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை கொடுக்க முயற்சி செய்தார்களாம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட மக்களுக்கு, ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் உதவி பொருட்களை கொடுப்பதாக கூறி,அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தெருவில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக முறையாக புகார் அளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதன்பேரில் அப் பகுதி மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எஸ்பியிடம் புகார்

இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், அதன் ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாலாஜி சரவணனை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘தூத்துக்குடி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, பிளவுபடுத்தும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் எஸ்பி யிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT