உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப் படம் 
தமிழகம்

பாஜக மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை அரிவாளால் வெட்டிய வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் நகர் மாவட்ட பாஜக தலைவர் ஆர்.வீரபாகு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில் 27 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த 29.3.2018-ல் என்னை ஒருவர் எம்ஜி பள்ளிக்கு சவாரிக்கு அழைத்தார். பள்ளிக்கு நூறு அடிக்கு முன்பே ஆட்டோவை நிறுத்தச் சொன்னார். ஆட்டோவை நிறுத்தியதும் அங்கு மறைந்து நின்றிருந்த 4 பேர் என்னை அரிவாளால் வெட்டினர். இதில் எனது இரு கைகளிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பின்னர் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி அவர்களிடமிருந்து தப்பினேன். என்னை அரிவாளால் வெட்டியவர்கள் தீவிரவாதிகளாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. என் மீதான தாக்குதல் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார். பின்னர், மனுதாரர் மீதான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT