கோப்புப் படம் 
தமிழகம்

விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து: உரக் கடைகளுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிற்குப் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக நேரடி பயன் பரிமாற்றம் (DBT – Direct Benefit Transfer) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மானிய உரங்களை விற்கும் சமயம், சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களையும், வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது.

எனவே, இத்தகைய விற்பனை, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-க்கு புறம்பான செயலாகும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இதுபோன்ற விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்கள் குறித்த புகார்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண். 93634 40360 மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் தெரிவிக்கும்படி வேளாண் பெருங்குடி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT