அண்ணா.பிரகாஷ் 
தமிழகம்

சகோதரரின் ஒப்பந்த பணி விவரத்தை வேட்புமனுவில் மறைத்ததால் தஞ்சாவூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்: ஆணையர் சரவணக்குமார் உத்தரவு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: சகோதரரின் மாநகராட்சி ஒப்பந்தபணிகள் குறித்த விவரத்தை வேட்பு மனுவில் தெரிவிக்காததால், தஞ்சாவூர் மாநகராட்சி திமுககவுன்சிலரை தகுதி நீக்கம் செய்துமாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அண்ணா.பிரகாஷ். இவர் தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ டிகேஜி.நீலமேகத்தின் அக்கா மகன். அண்ணா.பிரகாஷின் தம்பி ராம்பிரசாத், அரசு மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரராக உள்ளார். ஆனால், இதுகுறித்த விவரத்தை அண்ணா.பிரகாஷ் வேட்பு மனு தாக்கலின்போது தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி ஆணையருமான சரவணக்குமார், கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ், அவரது தம்பி ராம்பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, கடந்த மார்ச் 3-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, அண்ணா.பிரகாஷ் தனக்கு 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கிடையே, ராம்பிரசாத் மார்ச் 18-ம் தேதி மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்பு நேரில் ஆஜராகி, அண்ணா.பிரகாஷ் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள வீட்டை, ஒப்பந்த பணியை மேற்கொள்ள சொத்து மதிப்பாக மட்டுமே காட்டியுள்ளதாகவும், ஆனால் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் விளக்கம்அளித்துள்ளார்.

இந்நிலையில், அண்ணா.பிரகாஷ் கேட்ட கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில், தன்னியல்பாகவே மாமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதியை அண்ணா.பிரகாஷ் இழந்துவிட்டதாக கூறி, அவருக்கு ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்க முடியாது

இதுகுறித்து ஆணையர் சரவணக்குமார் கூறியது: ராம்பிரசாத்அளித்த தகவலின் அடிப்படையில், அண்ணா.பிரகாஷ் மாமன்றஉறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, அவருக்கு பதிவஞ்சலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் மார்ச் 30-ம் தேதி(நாளை) நடைபெற உள்ள நிலையில், அண்ணா.பிரகாஷ் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்றார்.

இதுகுறித்து அண்ணா.பிரகாஷ் கூறியது: இன்னும் எனக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை. என் தம்பி ராம்பிரசாத் உரிய விளக்கம் கொடுத்தும் அதை ஆணையர் ஏற்கவில்லை. அத்துடன், எனது தம்பியின் ஒப்பந்த வேலையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.

அதிரடி காட்டும் ஆணையர்

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணக்குமார் கடந்தாண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றபோது மாநகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத நிலை இருந்தது. இதைஅடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதனை பொதுஏலம் விட்டும், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக கட்டிய கடைகளை மாதம் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டதன் மூலமும், நிதி ஆதாரம் பெருகி ஊழியர்களின் சம்பளத்தை உடனடியாக வழங்கினார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பின்னர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாத கட்டிடங்களை கண்டறிந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை மீட்டார். தஞ்சாவூர் சுதர்சன சபா, தஞ்சாவூர் யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜுபிடர் திரையரங்கம் போன்ற இடங்கள் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து, அந்த இடங்களை மீட்டு மாநகராட்சி வசம் கையகப்படுத்தினார். தஞ்சாவூரில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை தனது அதிரடி நடவடிக்கையால் மீட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT