டி20 உலகக் கோப்பை மற்றும் தமிழக தேர்தலையொட்டி, சென் னையில் அரசியல் தலைவர்கள் படங்களுடன் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்ப் விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்தியா- வங்கதேசம் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற வங்கதேசத்துடனான லீக் போட்டி, கடைசி நொடி வரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
கிரிக்கெட் பரபரப்புக்கு மத்தியில் தமிழக தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. சில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூட்டணி முடிவான கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பெரிய கட்சிகளின் அழைப்பு கிடைக்காத கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றன.
டி20 கிரிக்கெட் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இருவகையிலும் தற்போது அனல் பறக்கும் நிலையில், குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்புகளில் அரசியல் தலைவர்களின் படங்களுடன் விற்பனையை தொடங்கியிருக்கிறார் சென்னை காசிச் செட்டி தெருவைத் சேர்ந்த வியாபாரி ஆனந்த் குமார் பவுமிக்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
நான் சிறு வயது முதலே புகைப் பட சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில், அது தொடர்பான புகைப்படங்களை காசிச் செட்டி தெருவில் காட்சிப்படுத்தி வருகிறேன். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டும், தமிழக தேர்தலும் சூடுபிடித்துள்ள நிலையில், ஏதாவது ஒரு கட்சிக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும், 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் மூலமாக பெரியவர்களுக்கு உணர்த்தவும், காலத்துக்கு ஏற்றவாறு தொழிலை மெருகேற்றிக்கொள்ளவும், அரசியல் தலைவர்களின் படம் இடம்பெற்ற கிரிக்கெட் ஸ்டம்ப், பேட்களை விற்பனை செய்து வருகிறேன். பேட்டுகள் ரூ.18 முதல் ரூ.45 வரையும், ஸ்டம்புகள் ரூ.45 முதல் ரூ.100 வரையும் விற்கிறேன். இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.