மதுரை: மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவில் அக்கட்சியின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சோலை எம்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், திமுக மாநகராட்சி நிர்வாகம் அங்கீகாரம் வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகர் மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணியும் துணை மேயராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜனும் பதவியேற்றனர். மண்டலத் தலைவர்கள், நியமனக்குழு தலைவர்கள் தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணிக்கு 81 கவுன்சிலர்கள் இருப்பதால் வேறு கட்சிகள் கவுன்சிலரின் ஆதரவைப் பெற வேண்டியதில்லை.
ஆனால், திமுக தரப்பில் 5 மண்டலத் தலைவர் பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிந்தது.
இந்நிலையில், நேற்று அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகர் கட்சி அலுவலகத்தில் கூடி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக 64-வது வார்டு சோலை எம்.ராஜா, துணைத் தலைவராக 48-வது வார்டு ரூபிணி குமார் மற்றும் பிற பொறுப்புகளுக்கும் தேர்வு செய்தனர். அவர்களை மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ அறிமுகம் செய்து அறிவித்தார்.
அதிமுக தரப்பில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல் விரைவில் மாநகராட்சி மேயர், ஆணையரிடம் வழங்கப்பட இருக்கிறது.
அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது திமுக சார்பில் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவராக தேர்வான எம்எல்.ராஜுக்கு எதிர்க்கட்சி அங்கீகாரம் வழங்கவில்லை. அதேநேரத்தில் அறை மட்டும் வழங்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் கூறிய வழிகாட்டுதல் படி எதிர்க்கட்சித் தலைவர் உட்பட மாநகராட்சிப் பொறுப்புகளில் கவுன்சிலர்கள் நியமிக்கப்படுவார்கள், என்றனர்.
ஆனால், திமுக மாநகராட்சி நிர்வாகமும், அதிமுக தேர்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளையும் அங்கீரிக்குமா? எனத் தெரியவில்லை.