கணித மேதை ராமானுஜத்தின் அபூர்வமானதும் அபார மானதுமான கணிதத் திறமையையும் காலத்தை கடந்த அவரது எண் சூத்திரங்களையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய அவரது சக பணியாளர் ஹார்டியைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், ராமானுஜம் தக்க சிகிச்சை இன்றி தன் 33-வது வயதில் அமரர் ஆகிய பிறகு அவரது அன்பு மனைவி ஜானகி பட்ட இன்னல் பற்றியும் அவருக்கு உதவிய தமிழ் எழுத்தாளர் பூரம் சத்தியமூர்த்தி பற்றியும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாது.
ராமானுஜம் மறைவிற்குப் பின்பு அவர் குடும்ப நலனுக்காக ஹார்டி இங்கிலாந்திலிருந்து அனுப்பிய ஒரு பெரும் தொகையை ராமானுஜத்தின் மனைவியை ஏமாற்றி அவரது உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இத்தருணத்தில், திருவல்லிக் கேணி பகுதியில் வசித்துக் கொண்டிருந்த தமிழ் எழுத் தாளரும் வேத வித்தகருமான பூரம் சத்தியமூர்த்தி, அதே பகுதியில் வசித்த ராமானுஜத்தின் மனைவி கஷ்டப்படுவதைத் தற்செயலாக அறிந்தார்.
ராமானுஜம் இங்கிலாந்து செல்வதற்கு முன் பணிபுரிந்த துறைமுகத் துறையில் அவர் அமர்ந்த இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரியும் அரிய வாய்ப்பைப் பெற்றவர் பூரம் சத்தியமூர்த்தி. ராமானுஜத்தின் மனைவியின் நிலையை அறிந் ததும் உடனே துறைமுக சேர்மனை அணுகி நிலைமையை எடுத்துச் சொல்லி அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு வழி வகுத்தார்.
ராமானுஜத்தின் மனைவி கேட்டுக்கொண்டதற்கேற்ப, அவரது உறவினர் பையன் ஒருவருக்குத் துறைமுகத் துறையில் வேலை கிடைக்க பூரம் சத்தியமூர்த்தி உதவினார். அந்தப் பணி நியமன உத்தரவை, துறைமுக சேர்மனே ராமானுஜத்தின் மனைவி வீட்டுக்குச் சென்று அளிக்கும்படி செய்தார்.
பூரம் சத்தியமூர்த்தி அதோடு நிற்கவில்லை. துறைமுக சேர்மன் அலுவலகத்தில் இருந்த பழைய, சிதைந்த ராமானுஜத்தின் ஓவியத்தை அதை முன்பு வரைந்த கோதண்டராமன் என்பவரைக் கொண்டே மீண்டும் ஆயில் பெயின்ட் ஓவியமாக வரையச் செய்தார். ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது ராமானுஜத்தைப் பற்றி ஒரு ஆங்கில நாடகம் எழுதி, இயக்கி, அரங்கேற்றினார்.
தற்போது இரண்டு கண்களையும் இழந்துவிட்ட நிலையில் திருவல்லிக்கேணியில் வசித்துவரும் பூரம் சத்தியமூர்த்தி, பல சிறுகதைகளையும் குழந் தைகளுக்கான கதைகளையும் எழுதியவர். இவரைப் பற்றிய ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக் கண்ணன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.