தமிழகம்

சமூக வலைதளங்களை கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம்: தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவில் அறிமுகம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழக காவல் துறையின் சைபர்க்ரைம் பிரிவில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வங்கி மோசடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள், போலி கணக்கு மூலம் மோசடி செய்தல், சமூக வலைதளங்களில் போலி செய்திகளைப் பரவவிடுதல், அவதூறு பரப்புதல், இணையதளம் மூலம் பெண்கள், குழந்தைகளை மன ரீதியில் துன்புறுத்துதல், ஆன்லைன் மோசடி, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 2020-ம் ஆண்டில்தமிழகத்தில் சைபர் குற்றங்கள்இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. எனவே,சைபர் குற்றங்களைத் தடுக்கவும்,நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, இணைய குற்ற வழக்குகளில் விரைவாக துப்புதுலக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை வேப்பேரியில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அதேபோல, வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் போலீஸாரின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை போலீஸாருக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அவதூறுகளைப் பரப்புதல், கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்தல், கலகம் ஏற்படும் வகையில் ஒன்றுகூட சமூக வலைதளங்கள் வாயிலாக ஆட்கள் மற்றும் ஆதரவுதிரட்டுதல் என பல்வேறு வகையான சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை புதிய தொழில்நுட்பம் மூலம் போலீஸாரால் துல்லியமாகவும், உடனடியாகவும் அடையாளம் காண முடியும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் மற்றும்சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் போலீஸாருக்கு வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறும்போது, "முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை அடையாளம்காண சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மெயில் அனுப்புவோம்.

மத்திய அரசு அதிகாரிகளின் உதவியுடன்தான் அந்த நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.ஆனால், தற்போது புதிய தொழில்நுட்பம் மூலம் நாங்களே சமூக வலைதங்களில் பதிவிடுபவர்களை உடனடியாக அடையாளம் காணமுடியும். இதன் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்" என்றனர்.

SCROLL FOR NEXT