சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் செய்யப்பட்ட உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனே பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் 14-ம் தேதி பணிநிரவல், 15, 16-ம் தேதிகளில் உள் மற்றும் வெளி மாவட்டங்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் அவரவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆணை பெற்ற பள்ளியில் உடனே சேர அறிவுறுத்த வேண்டும்.
முக்கியமாக பணிநிரவல் செய்யப்பட்ட உபரிபட்டதாரி ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. இதை மீறி, உபரி ஆசிரியர்கள் தொடர்ந்து பழைய பள்ளியிலேயே பணிபுரிந்து வருவது தெரியவந்தால் அதற்கு முழு பொறுப்பும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே ஏற்கவேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.