அரியலூர் மாவட்டம் உட்கோட்டையில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் சின்னிஜெயந்த்(26). இவரது தம்பி விநாயக ஆனந்தின் மனைவி கவுதமிக்கு, அதே ஊரைச் சேர்ந்த திவாகர்(22) என்பவர் அடிக்கடி உதவி செய்ததால், சின்னிஜெயந்த்-திவாகர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், கடந்த 2012 ஏப்ரல் 19-ம் தேதி சின்னிஜெயந்த் அடித்ததில் திவாகரின் பல் உடைந்தது. இதையடுத்து அடுத்த நாள் திவாகர், அவரது தந்தை அய்யாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் 14 பேர் திரண்டு சென்று சின்னிஜெயந்தை அவரது வீட்டுக்குள் புகுந்து தாக்கினர். இதில், படுகாயமடைந்த சின்னிஜெயந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில், திவாகர், அய்யாபிள்ளை(58) மற்றும் உறவினர்கள் சுரேஷ்(23), பரமசிவம்(40), மணிகண்டன்(33), பார்த்திபன்(30), விக்னேஷ்(38), அர்ஜூனன்(60), ஆனந்த்(30), அன்பரசன்(45), கலைமணி(26), சுரேஷ்(22), குண்டு சுரேஷ்(27), கொளஞ்சி(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஏ.கே.ஏ.ரகுமான் குற்றஞ்சாட்டப்பட 14 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.