“கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தளத்துடன் பாலம் அமைத்து, ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. விவேகானந்தர் பாறைக்கு பெரும்பாலும் தடங்கலின்றி படகுகள் இயக்கப்பட்டாலும், கடல் நிலையில் ஏற்படும் மாறுபாடுகளால் திருவள்ளுவர் சிலைக்கு அவ்வப்போது படகு சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு இடையே நடந்து சென்று பார்வையிடும் வகையில் கண்ணாடித் தளத்துடன் இணைப்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. இணைப்பு பாலம் அமைய உள்ள பகுதியை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படவில்லை. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை மேம்படுத்த திட்டம் வகுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் 72 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் தனிக் கவனம் செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகைப் பார்த்து ரசிக்கவும், கடலின் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கடினத் தன்மைக்கொண்ட கண்ணாடி இழை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் பாலம் பணிகள் நிறைவடைந்து முதல்வர் திறந்து வைப்பார் என்றார் அவர்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ், எஸ்பி ஹரிகிரண் பிரசாத், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உடனிருந்தனர்.