உடுமலை அருகே ஜம்புக்கல் மலை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் நேற்றுகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வட்டாட்சியர்கணேசன், டிஎஸ்பி தேன்மொழிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டு, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்டு ஜம்புக்கல் மலை பகுதி உள்ளது. அங்கு வருவாய்துறைக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 30 ஆண்டுகளுக்கு முன் நிலமற்றஏழை விவசாயிகளுக்கு நிபந்தனையின் பேரில் இலவச பட்டா விநியோகிக்கப்பட்டது. நிபந்தனை பட்டா பெற்ற பயனாளிகளின் வாரிசுகள் சிலர் நிலத்தை தனியாருக்கு விற்று விட்டனர்.
இவ்வாறாக ஜம்புக்கல் மலையின் பெரும்பகுதி அரசு நிலம் தனியார் வசம் உள்ளது. ஆக்கிரமிப்பை மீட்க கோரி ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.