செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் தலையீடு இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட குழுத் தலைவர், ஒன்றியத் தலைவர், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர் மற்றும் உறவினர்களின் தலையீடு இருந்தால்சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்திலுள்ள அனைத்துத் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவின் பேரில்தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “விதிகளை மீறும் ஊராட்சி பிரதிநிதிகள் மீதுதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பிரதிநிதிகளின் கணவர் அல்லது உறவினர்கள் கலந்து கொண்டதாக நிரூபிக்கப்படும் ஊராட்சி மன்ற ஒன்றிய கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனே ரத்து செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் அவர்களை வீட்டிலேயே முடக்கிவைத்து விட்டு அவர்களது கணவர், உறவினர்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று தாங்கள்தான் தலைவர் என்று அதிகாரிகளிடம் கூறிக் கொள்வது, பொதுமக்களிடமும் இவர்களே தலைவர் போன்று அதிகாரம் செய்வது, அரசு திட்ட பணிகளை முன்னின்று செயல்படுத்துவது, மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் இவர்களே முன்னின்று நடத்துவது பல இடங்களில் நடைபெற்றுவருகிறது. தற்போது காட்டாங்கொளத்தூர், பரங்கிமலை ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் கணவர், உறவினர்களின் தலையீடுஅதிகமாக உள்ளது.
இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது வேதனையாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கைக்குப் பிறகும் கணவர், உறவினர்களின் தலையீடு குறையவில்லை” என்றனர்.