சென்னையைச் சார்ந்த பெண்கள் பராமரிக்கும் மயானத்தை, தன்னார்வலர்கள் ஒன்றுகூடி சுத்தப்படுத்தி, ஓவியங்கள் தீட்டி மயான சூழலையே மாற்றியுள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் புது ஆவடி சாலையில் இருக்கிறது வேலங்காடு எரியூட்டு மயானம். அங்கே லஞ்சமும் போதையும் தலை விரித்தாடிய சூழலில், சென்னை மாநகராட்சி மயானத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்திடம் (ICWO) கொடுத்தது. அதன் நிறுவனரான ஹரிஹரன் மயான வேலை குறித்து தன் மையத்தில் பணிபுரியும் பெண்களிடம் எடுத்துச் சென்றார். எஸ்தர் சாந்தி மற்றும் பிரவீணா என்னும் இரண்டு பெண்கள் தைரியத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
இருவரும் வேலங்காடு மயானத்தில் ஒரு வருடம் ஒன்றாக வேலை பார்த்தனர். பின்னர் ஓட்டேரி மயானத்துக்கு எஸ்தர் மாற்றப்பட, இப்போது ஒரு பெண்ணின் துணையோடு வேலங்காடு மயானத்தை நிர்வகிக்கிறார் பிரவீணா. இங்கே தூய்மையை முன்னெடுக்கும் நோக்கில், மயானத்தை சுத்தப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசினார் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஹரிஹரன்.
"சென்னையில் 144 மயானங்கள் இருக்கின்றன. அவற்றில் 22 மயானங்களில் மின் எரியூட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் போக்கு குறைந்துள்ளது. இது சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க உதவுகிறது. பெண்கள் முதன்முதலில் மயானத்தில் வேலை பார்க்க ஏதுவான சூழலை அமைத்தது எங்கள் நிறுவனம்தான். இப்போது மயானத்தை முழுவதுமாக சுத்தப்படுத்தி, வர்ணங்கள் தீட்டி மயான சூழலை முழுவதுமாக மாற்ற உள்ளோம்.
உடல்நிலை சரியில்லாதவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், உறவினர்கள் திடீரென இறந்தால் வரமுடியாமல் போகிற சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் உறவினர்களைக் கடைசியாகக் கூட பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். இதனால் இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளைப் பார்க்கும் வகையில், இங்கே கேமராக்களைப் பொருத்தி, இணைய இணைப்புகளைத் தரும் முயற்சியில் இருக்கிறோம். இப்போதைய முதல் திட்டம் சுத்தமான, ஓவியங்கள் தீட்டப்பட்ட மயானமாக மாற்றுவதுதான்" என்கிறார்.
இந்த முயற்சியில் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்துடன் கைகோத்துள்ள, அயனாவரத்தைச் சேர்ந்த நவீன் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் சம்பத், இது குறித்து நம்மிடம் பேசினார்.
"வேலை பார்க்கும் இடத்தில் கொஞ்சம் சேவையும் செய்யலாமே என்று தோன்றியது. உடற்பயிற்சிக் கூடத்துக்கு வருபவர்களில் விருப்பமும், உடல் தகுதியும் கொண்டவர்களை அழைத்துச் சென்று நிறைய ரத்த தானம் கொடுத்திருக்கிறோம். இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் மயானத்தைச் சுத்தப்படுத்தும் முயற்சி குறித்துக் கேள்விப்பட்டேன். நாமும் நம் வாடிக்கையாளர்களோடு இதில் பங்கெடுக்கலாமே என்று தோன்றியது.
உடல் கலோரிகளை குறைப்பதற்காக தினந்தோறும் ஏராளமானோர் இங்கே உடற்பயிற்சி செய்ய வருகின்றனர். அவர்களிடம் மயானத்தை சுத்தப்படுத்துவதும் ஒரு வகையான உடற்பயிற்சிதான் என்று கூறினேன். விருப்பம் உடையவர்கள் வரலாம் என்றதும், பல வாடிக்கையாளர்கள் கலந்துகொள்வதாக ஒத்துக்கொண்டனர். எங்களின் வாடிக்கையாளர்களில் 4 பெண்கள் உட்பட 40 பேர் ஆர்வத்துடன் வந்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் என்கிறார்.
இவர்களோடு மனோகர் என்பவர், தன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பணியாளர்களை அழைத்துவந்து மயானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவை குறித்து நம்மிடம் பேசிய தன்னார்வலர்களில் ஒருவரான ரம்யா, "நான் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்வது என்னுடைய வழக்கம். எங்கள் மாஸ்டர் சம்பத், மயானத்தை சுத்தப்படுத்தும் வேலைக்கு வருகிறீர்களா என்று கேட்டார். வீட்டில் கேட்டால் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அதனால் உடற்பயிற்சி செய்யப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இங்கே வந்து வேலை செய்வது சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.
மயானத்தில் உள்ள சுற்றுச் சுவர்களில் தண்ணீரை சேமிப்போம்; காடுகளைப் பாதுகாப்போம். ஆதிவாசிகள் நலன், விலங்குகள் நலன் ஆகியவை குறித்த ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை குறித்து மேலும் பேசிய ஹரிஹரன், ''மயானங்களை ஒரே நாளில் சுத்தப்படுத்திவிட முடியாது. இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். விருப்பமும், நேரமும் கொண்டவர்கள் எங்களுடன் இணைந்து பணிபுரியலாம். மயானத்தில் தூய்மையை மீட்டெடுக்க வாருங்கள்!" என்றார்.